சேலம் கோயிலில் முருகன் என்று வடிவமைக்கப்பட்டுள்ள சிலையைப் பார்த்த பக்தர்கள் இது முருகனும் இல்லை, முனியப்பனும் இல்லை… எதற்காக கடவுளை இப்படி ஏளனப்படுத்துகிறார்கள் என்று பொங்கித் தீர்த்திருக்கிறார்கள்.
அழகென்று சொல்லுக்கு முருகா… உன் அருளின்றி உலகிலே பொருளேது முருகா … என்று முருகன் என்றாலே அழகன் என்றுதான் அவருடைய அடியார்களும் பக்தர்களும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே அமைந்துள்ள அனைமேடு ராஜமுருகன் திருக்கோவிலில் 56 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள முருகன் சிலை பக்தர்கள் மத்தியில் கோபக்கனலை ஏற்படுத்தி இருக்கிறது.
இக்கோயிலின் ஸ்தாபகரான வெங்கடாஜலம், சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ள முத்துமலை முருகன் கோயிலில் உள்ள பிரமாண்ட முருகன் சிலையைப் போன்று அனைமேடு ராஜமுருகன் கோயிலிலும் அமைக்க விரும்பி உள்ளார். இதற்காக சேலத்தை சேர்ந்த சிலை வடிவமைப்பாளர் சித்தையன் என்கிற சபரியிடம் பொறுப்பைக் கொடுத்துள்ளார்.
பெரும்பாலும் முனீஸ்வரன் சிலைகளையே வடிவமைத்து வந்த சித்தையன் முதன்முறையாக இந்த முருகன் சிலையை வடிவமைத்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதமாக, 40 லட்சம் ரூபாய் செலவில் உருவான இந்த முருகன் சிலைக்கு வரும் 19ஆம் தேதி கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது. இதற்காக பக்தர்களின் பார்வைக்காக முருகன் சிலை திறக்கப்பட்டது.
சிலையைப் பார்த்தவர்கள் முருகனின் உடலமைப்பு மற்றும் முக அமைப்பு குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதோடு சிலையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட இந்து அமைப்பினர் பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்து கடவுள்களை ஏன் இப்படி ஏளனப்படுத்துவது போன்ற செயலில் ஈடுபடுகிறீர்கள். நாங்களே அந்த சிலையை உடைத்துவிடுவோம் என்றெல்லாம் கடுமை காட்டி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது அந்த சிலையை கோயில் நிர்வாகம் மூடி வைத்துள்ளது. முருகனின் சிலையை மீண்டும் சீரமைக்க முடிவு செய்துள்ளதாக, கோயில் ஸ்தாபர் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்.