தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இன நாய்கள் மிக வேகமாக ஓடக்கூடியவை மற்றும் நீண்ட காலத்திற்கு முன்பு வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டன. தற்போது, 2017ல் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை உள்ளிட்ட நாட்டு ரகங்களை வாங்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொதுவாக நாட்டு நாய்கள் மீது நாட்டம் கொண்ட பிரதமர் மோடி, ராஜபாளையம், ராம்பூர் கிரேஹவுண்ட் போன்ற இனங்கள் குறித்து ஏற்கனவே பேசியுள்ளார்.
இதையடுத்து பிரதமரின் பாதுகாப்புக்கு நாட்டு நாய்களை சேர்க்க மேற்கண்ட நாய்களின் இனங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், இறுதியாக முதோல் இன நாய்களை தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பிறந்து 2 மாதங்களே ஆன இரண்டு முதோல் இன நாய்குட்டிகளை பிரதமர் மோடியின் பாதுகாப்பு வீரர்கள் எடுத்துச் சென்று பயிற்சி அளிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த நாய்களின் பார்வைத்திறன் மிகச் சிறப்பு வாய்ந்ததாகவும், நுண்ணுணர்வு துரிதமாக செயல்படும் விதத்திலும் இருக்கும். மன்னர் காலத்தில் இந்த இன நாய்கள் வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முதோல் இன நாய்கள் ஒல்லியான, உயரமான தோற்றத்தை கொண்டவை. இவை சராசரியா 20 முதல் 22 கிலோ எடையுடன், 72 செமீ உயரத்துடன் காணப்படுபவை. சிறந்த மோப்பத்திறன் கொண்டவை. தற்போது பிரமதர் மோடியின் பாதுகாப்பு குழுவில் நாட்டு ரக முதோல் இன நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய் இனங்கள் இருந்தாலும், அவற்றில் 350 மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த 350 இல் ஏழு இந்திய இனங்கள். மேலும், இந்த ஏழு இனங்களில் கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகியவை தமிழகத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது .