சாயல்குடியில் பழைய மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் பதநீரை வெல்கம் ட்ரிங்ஸாக தங்களது ஆசிரியர்களுக்கு கொடுத்து வரவேற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் மிகுந்த உயர்நிலை பதவிகளில் வகித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் 1995 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் – ஆசிரியர்களின் ‘ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி நரிப்பையூர் தனியார் திருமண மஹாலில் நடந்தது.

இதில் கலந்து கொள்ள வந்த தங்களின் இருபால் ஆசிரியர்களை, முன்னாள் மாணவர்கள் இயற்கை பானமான பதநீரை வெல்கம் டிரிங்க்ஸாக கொடுத்து வரவேற்றனர். பனை ஓலையை பாத்திரமாக்கி, அதில் சுத்தமான பதநீரை ஊற்றி அவர்கள் அனைவரையும் பருகச் செய்தனர்.
பாட்டிலில் அடைக்கப்பட்ட வேதிப் பொருள் கலந்த குளிர்பானங்களை கொடுக்காமல், இயற்கைச் சார்ந்து ஊட்டச்சத்து மிகுந்த பதநீரைக் கொடுத்து வரவேற்ற மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு வாழ்த்தினர்.
எப்போதும் இயற்கை முறையில் கிடைக்கும் உணவு வகைகளை உண்ணவும், பானங்களையும் பருகவும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில், தங்களின் முன்னாள் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும்,நினைவு பரிசுகள் வழங்கினர். மேலும் தாங்கள் பயின்ற காலங்களில் நடந்த சுவராஸ்ய சம்பவங்களை அசைபோட்டுப் பேசி ஒருவருக்கொருவர் நினைவுகளை பரிமாறிக் கொண்டனர்.
இதையும் படிங்க: அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு