தஞ்சை :அரசியல் பிரபலங்களை அஞ்ச வைக்கும் தஞ்சை பெரிய கோவில் இந்த தேர்தல் சமயத்திலும் அந்த அச்சத்தை செவ்வனே கொடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக தஞ்சையில் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்த அரசியல் பிரபலங்கள் ஒருவர் கூட தஞ்சை பெரிய கோவில் இருக்கும் தெரு பக்கம் கூட போகவில்லை என்பது ஹைலைட்!
அப்படி தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் மர்மம் தான் என்ன?
உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவில் முதலாம் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் கி.பி.1003 தொடங்கி கி.பி.1010 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டோடு 1000 ஆண்டுகளை நிறைவு செய்தது இக்கோவில். சோழர்களின் சிறந்த கட்டிடக்கலையின் உதாரணமாக திகழும் இக்கோவில் பல மர்மங்களையும் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு அதிமுக வேட்பாளர் பிரச்சனை – நம்பி ஏமாந்தாரா ஈ.பி.எஸ்? கே.சி.பழனிச்சாமி கேள்வி?
அந்த வகையில் நிலவும் ஒரு மர்மம் நிறைந்த நம்பிக்கை தான், “தஞ்சை பெரிய கோவிலுக்கு அரசியல் பிரபலங்கள் சென்றால், குறிப்பாக அதன் பிரதான வாயில் வழியாக சென்று வந்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும், பதவிகள் போகும், தொடர் தோல்விகள் உண்டாகும், அவர்களுக்கு கெடுதல் நடக்கும்” என்ற நம்பிக்கை. மன்னர் ராஜராஜசோழனே பக்கவாட்டு வாயில் வழியாக தான் கோவிலை பார்க்க வருவார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது.
இத்தகைய மர்மத்திற்கு சில உதாரணங்களும் உண்டு. தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருந்த பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் கொல்லப்பட்டது; 2010 ஆம் ஆண்டு ராஜராஜசோழனின் ஆயிரமாவது சதய பெருவிழா நடந்தபோது 1000 பரத கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை காண வந்த அப்போதைய முதல்வரான மறைந்த கருணாநிதி, அடுத்தடுத்த 2011 மற்றும் 2016 தேர்தலில் தோல்வி அடைந்தது; உடன் வந்திருந்த ஆ.ராஜா 2G வழக்கில் சிறை சென்றது என தொடங்கி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் ஷர்மா என பலரை உதாரணங்களாக இப்போது வரை சொல்லி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு செய்வதற்கான வாக்குச்சாவடிகள் தயார் – சத்யபிரதா சாகு
கடந்த காலத்தில் அரசியலில் கோலோச்சியவர்கள் தொடங்கி இப்போது வரை அரசியலில் கோலோச்சுபவர்கள் வரை அனைவரும் சாதாரண நாள் மட்டுமல்ல முக்கியமான விழாக்களுக்கு கூட தஞ்சை பெரிய கோவில் பக்கமே போகாதவர்கள் தான். அதில் சீமான் மட்டும் விதிவிலக்காக இந்த கோவிலுக்கு சென்று வந்துள்ளார். அவருடைய அரசியல் பயணம் எப்படி இருக்கிறது என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். ஆக மொத்தத்தில் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் முதல் பகுத்தறிவு பேசுபவர்கள் வரை அனைத்து தலைவர்களும் தஞ்சை பெரிய கோவிலை புறக்கணிப்பதே யதார்த்த உண்மை.
அந்த வகையில் தான், தற்போதைய அனல் பறந்த பிரச்சாரத்தின் நடுவே கோவில்கள், சர்ச்சுகள், பள்ளிவாசல்கள் என எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் சென்ற அத்தொகுதி வேட்பாளர்களும், அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த தலைவர்களும் தஞ்சை பெரிய கோவில் பக்கம் மட்டும் தலைகாட்டவில்லை. அவ்வளவு ஏன், அந்த சாலையை கூட கடந்து செல்லவில்லையாம்.