நாடாளுமன்றத் தேர்தல்-2024இல் தனித்துப் போட்டியிட்டு, 8.2% வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியை வாழ்த்திய அரசியல் கட்சி தலைவர்களுக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி 2010இல் தொடங்கப்பட்டது.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் பொறுப்பேற்றார். அதன் பிறகு சீமான் தலைமையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலில் போட்டியிடத் தொடங்கியது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஆண், பெண் இரு பாலருக்கும் சரிபாதி தொகுதிகளை ஒதுக்கியது. அதாவது, அக்கட்சி சார்பில் 20 தொகுதிகளில் ஆண்களும், 20 தொகுதிகளில் பெண்களும் வேட்பாளர்களாகக் களமிறங்கினர். அதில் ,3.9 சதவிகித வாக்குகள் கிடைத்தன.
அடுத்து வந்த 2021ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 170க்கும் அதிகமான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றனர்.
இதனை தொடர்ந்து 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 32 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரிசையில் நாம் தமிழர் கட்சி சந்தித்த நான்காவது பொதுத் தேர்தல் இது.
மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வாக்கு சதவீதமான 8%-ஐ இந்தத் தேர்தலில் எட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சிக்கு 8.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது.
மேலும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் உருவெடுத்து உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல்-2024இல் தனித்துப் போட்டியிட்டு, 8.2% வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியை வாழ்த்திய அரசியல் கட்சி தலைவர்களுக்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜி கைது: ”ஜூன் 14 ”இன்றுடன் ஓராண்டு நிறைவு..- மறுக்கப்படும் ஜாமீன்!
.
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
நாடாளுமன்றத் தேர்தல்-2024இல் தனித்துப் போட்டியிட்டு, 8.2% வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக வளர்ச்சியடைந்துள்ள நாம் தமிழர் கட்சியை வாழ்த்திய பெருமக்களுக்கு நன்றி!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தமிழ்த்தேசியப் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும்,மதிப்பிற்குரிய அம்மையார் சசிகலா அவர்களுக்கும்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு இரத்தம் தி.வேல்முருகன் அவர்களுக்கும்,
மதிமுக தலைமைக் கழகச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பி துரை வைகோ அவர்களுக்கும்,எஸ்.டி.பி.ஐ – தமிழ்நாடு மாநிலத் தலைவர் தம்பி நெல்லை முகமது முபாரக் அவர்களுக்கும்,
அன்புத் தம்பிகள் இயக்குநர்கள் சேரன், அமீர், சுரேஷ் காமாட்சி, ஆதம் பாவா ஆகியோருக்கும்,ஆருயிர் இளவல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், நடிகை கஸ்தூரி அவர்களுக்கும்,
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் அன்புச் சகோதரர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களுக்கும்,
அரசியல் திறனாய்வாளர் அண்ணன் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும்,பத்திரிகையாளர்கள் ஐயா அய்யநாதன், ஐயா பா.ஏகலைவன், சகோதரர் எஸ்.பி.லட்சுமணன், தம்பி ரங்கராஜ் பாண்டே, சகோதரர் சிவப்ரியன் ஆகியோருக்கும்,
ஊடகவியலாளர்கள் சகோதரர்கள் வலைப்பேச்சு பிஸ்மி மற்றும் அந்தணன், தம்பி கார்டூனிஸ்ட் பாலா, தம்பி பிரசாந்த் ரங்கசாமி, தம்பி அருள்மொழிவர்மன், தம்பி கேப்ரியல் தேவதாஸ் ஆகியோருக்கும்,அம்மையார் ஜெயலலிதா அவர்களின் முன்னாள் உதவியாளர் சகோதரர் பூங்குன்றன் அவர்களுக்கும்
மற்றும் நேரிலும், தொலைபேசியிலும், இணையவெளியிலும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், அரசியல் ஆளுமைகளுக்கும்,
திரைத்துறை உறவுகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், அச்சு, காட்சி மற்றும் வலையொளி ஊடகங்களுக்கும் எனது பேரன்பினையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.