புதுச்சேரியில் கஞ்சா விற்பனைப் போட்டி காரணமாக சிறையில் இருந்து வெளியில் வந்த நபரை படுகொலை செய்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதி சேர்ந்தவர் ருத்ரேஷ் . பெயிண்டரான ருத்ரேஷ், போதிய வருமானம் இல்லாததால், அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவரோடு சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நாளடைவில் இருவரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக இவர்களுக்கு இடையே கஞ்சா விற்பனையில் தொழில்போட்டியும் ஏற்பட்டுள்ளது.
இந்த தொழில் போட்டி காரணமாக இருவரும் அவ்வப்போது மோதிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒருமாதத்துக்கு முன்பு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் கௌதமை, ருத்ரேஷ் கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த கௌதம் அளித்த புகாரின் பேரில் ருத்ரேஷ் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ருத்ரேஷ் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அவரை கௌதம் தரப்பு கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை, உருளையன் பேட்டை பெரியார் நகர் பகுதியில் உள்ள கங்கை முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தை ருத்ரேஷ் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு பைக்கில் வந்த 3 பேர் கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த ருத்ரேஷை, ஊர்வல பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த உருளையன்பேட்டை போலீசார் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ருத்ரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜாமீனில் வந்த நபர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிகழ்விலேயே கஞ்சா விற்பனை தொழில் போட்டியில் கொல்லப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், கௌதமும் அவரது கூட்டாளிகளும்தான் ருத்ரேஷை அரிவாளால் வெட்டியது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் கவுதம், அவரது நண்பர்களான ஈஸ்வர் மற்றும் அரவிந்த் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் கொலையில் தொடர்புடைய எழில், பரத், சதீஷ் ஆகியோரையும் தேடி வருகின்றனர்.
கவுதமுடன் ஏற்கனவே ருத்ரேஷுக்கு தொழில்போட்டி இருந்த நிலையில் ஈஸ்வரிடமும் தகராறு செய்துள்ளார். இதனால் ருத்ரேஷை போட்டுத் தள்ள நாள் பார்த்துள்ளனர்.
தேர்தல் வந்ததால், திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த கௌதமை, தற்போது ஈஸ்வர் வரவழைத்துள்ளார். சம்பவத்துக்கு முந்தைய தினம் புதுச்சேரி வந்த கௌதம், நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
மேலும் கஞ்சா போதையிலும் இருந்தபடி, ருத்ரேஷை கொலை செய்தததாக கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.