உத்தரப்பிரதேச பள்ளி ஒன்றில் வேலை நேரத்தில் பேசியல் செய்ததை வீடியோ எடுத்த ஆசிரியையை, தலைமை ஆசிரியை கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
ஆசிரியையை கடித்த தலைமை ஆசிரியை
ஆரம்பப் பள்ளி பெண் தலைமை ஆசிரியை சன்கீதா சிங் பள்ளி வேலை நேரத்தில், அங்குள்ள ஒரு அறையில் அழகுக்கலை நிபுணரை வரவழைத்து முக அலங்காரம் செய்துள்ளார். இதனை அதே பள்ளியில் பணியாற்றும் உதவி ஆசிரியை அனம்கான் வீடியோ எடுத்துள்ளார். இதன்பின்னர், தலைமை ஆசிரியர் தன்னை கடித்து வைத்ததாகக் கூறி கையில் பற்களின் தடத்தை அனம்கான் காட்டுகிறார். அவரது மற்றொரு கையில் ரத்தத் துளிகள் உள்ளன.இதேபோல் அவரது தலையிலும் காயம் இருப்பதாக அந்த வீடியோ காட்சியில் உள்ளது.
கடி வாங்கிய உதவி ஆசிரியை அதன்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதோடு, இதுதொடர்பாக பிக்பூர் காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதி கல்வி அதிகாரி உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொண்ட பிக்பூர் வட்ட அதிகாரி மாயாராய் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.