கோவை சிறையில் வைத்து 10 காவலர்கள் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் தெரிவித்த சவுக்கு சங்கர் தன்னை வேறு சிறைக்கு மாற்ற கோரிக்கை விடுத்தார்.

காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறாகப் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த 4ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டத்தில் இருந்தவரை, புகாரின் பேரில் கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சை வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் மீது தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கில் நேற்று (மே 7) சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கின் விசாரணைக்காக அவரை பழனிசெட்டிப் பட்டி போலீசார் மதுரையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் இன்று (மே 8) ஆஜர் படுத்தினர்.
இதற்காக கோவை சிறையில் இருந்தவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார்.
வாகனத்தில் இருந்து இறங்கியபோது அவரது வலது கை துணியில் கட்டப்பட்டிருந்தது. மேலும் மிகுந்த சிரமத்துடனே அவர் நடந்து சென்றார்.

தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் தீவிரவாதியை அழைத்து வருவது போல போலீசார் திரண்டு சவுக்கு சங்கரை அழைத்து வந்தது அங்கிருந்தவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
அதன்பின்னர் நீதிபதி செங்கமலச் செல்வன் முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையின் போது, கோவை சிறையில் வைத்து 10 காவலர்கள் ஒன்று சேர்ந்து தன்னை தாக்கியதாக நீதிபதி முன்பு கண்ணீர் விட்டு கலங்கினார்.
இதையும் படிங்க: ”அடுத்ததடுத்து வழக்கு பதிவு..”சவுக்குசங்கர் நிலை என்ன?
கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனக் கூறிய சவுக்கு சங்கர், மதுரை சிறைக்கு தன்னை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். அதுகுறித்து எத்தகைய பதிலும் தெரிவிக்காத நிலையில், சவுக்கு சங்கருக்கு மே 22ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கோவை சிறைக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது சவுக்கு சங்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வாயிலில் பெண்கள் பலர் திரண்டு போராட்டம் நடத்தினர். அவருக்கு எதிராக கோஷமும் எழுப்பினர். பெண்களில் ஒருசிலர் தங்கள் கைகளில் துடைப்பத்தை தூக்கிப் பிடித்தபடி ஆவேசம் காட்டினர்.
பெண்களின் இந்த போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.