ராகுல்காந்தியை புகழ்ந்து செல்லூர் ராஜூ பதிவிட்டுள்ள ட்விட், அதிமுக ராகுலை ஆதரிப்பதற்கான சிக்னலா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2011 முதல் 2021 வரை ஹாட்ரிக் வெற்றி பெற்றிருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த செல்லூர் ராஜு. கடந்த அதிமுக ஆட்சியின் போது கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2017-ம் ஆண்டு வைகை நீர்த்தேக்கத்தில் ஆவியாதலால் ஏற்படும் நீர் இழப்பை தவிர்ப்பதற்காக தெர்மாகோல் ஷீட்களை மிதக்க விடுவதற்காக 10 லட்சம் ரூபாய் ஒதுக்கியதாகக் கூறியிருந்தார்.
தொடர்ந்து வைகை நீர்த்தேக்கத்தில் தெர்மாகோல் துண்டுகளை அவர் மிதக்க விட்ட நிலையில் காற்றினால் அவை அடித்துச் செல்லப்பட்டன.
அப்போது சமூக ஊடகங்களில் அவரை கிண்டலடித்து மீம்ஸ்களை பதிவிட்டனர்.
சமீப காலமாக சமூக ஊடகங்களிலும் வளைய வரும் செல்லூர் ராஜு, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அதிமுக செய்திகளையும், இயற்கை தொடர்பான வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் இன்று ஒரு வீடியோவினை பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உணவகம் ஒன்றில் உணவு உண்பதைப் போன்ற வீடியோவை பகிருந்துள்ள செல்லூர் ராஜு, அதில் நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் என்று பதிவிட்டுள்ளார்.
நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!!
செல்லூர் ராஜூ பதிவிட்டுள்ள இந்த வீடியோ அதிமுகவுக்குள்ளேயும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுக. இதனால் காங்கிரசுடன் அதிமுக கைகோர்க்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி போட்டு தேர்தலைச் சந்தித்தது.
மக்களவைத் தேர்தலின் போது அதிமுக தரப்பில் மேற்கொண்ட பிரசாரத்தின் போது கூட யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து தெரிவிக்க வில்லை.
அதிமுக வேட்பாளர் வெற்றி பெறச் செய்யுங்கள், அவர் மத்திய அரசிடம் இருந்து தொகுதிக்கான திட்டங்களை கேட்டுப் பெற்றுத் தருவார் என்றுதான் கூறப்பட்டது.
இந்த நிலையில்தான், காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியைப் புகழ்ந்து செல்லூர் ராஜு ட்விட் செய்திருப்பது, அதிமுக, பிரதமராக ராகுலை ஏற்றுக் கொள்கிறதா என்னும் கேள்வியை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜிவ்காந்தியின் நினைவுதினத்தில் ராகுல்காந்தியைப் புகழ்ந்திருக்கிறாரே… ஒருவேளை அப்பாவுக்குப் பதிலாக மகனை மாற்றிப் புகழ்ந்திருக்கிறாரோ என்றும் கேலி பதிவுகளும் இணையத்தில் உலா வருகிறது.