சிறுவயது பாலகன் ஒருவன் பசியோடு இருப்பவர்களுக்கு தேடிச் சென்று உணவு வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக, பலரும் பாராட்டி வருகிறார்கள்.
சாலையோரம் இருக்கும் ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோரை தேடிச் சென்று சிறுவன் உணவு வழங்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதியில் சிறுவன் உணவு வழங்கிய வீடியோ எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இன்னும் கூடுதலான தகவல் இந்த சிறுவன் சமூக சேவகர் பாரதி மோகனின் மகன் என்பதுதான்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சமூக சேவகர் பாரதி மோகன்.
சிறு வயது முதலே பாரதிமோகன் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.
இதற்காக தினமும் தனது வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து உணவு சமைத்து எடுத்துக் கொண்டு நேரில் சென்று பல இடங்களில் வழங்கி வருகிறார்.
பொருளாதார வளமற்ற நிலையிலும் கூட தினமும் வாகனத்தில் உணவினை எடுத்து சென்று ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் யூகேஜி படித்து வரும் சமூக சேவகர் பாரதி மோகன் மகன் வருணும், இந்த உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
தானும் உடன் வருவதாக தந்தையிடம் அடம்பிடித்து ஒன்றாக வரும் பாலகன் வருண், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலம் மற்றும் தண்ணீர் வழங்கி வருகிறார்.
சிறுவனிடம் உணவினைப் பெறுபவர்கள், தங்கள் மனதார வருணை வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றனர்.
வருண் உணவு வழங்கும் காட்சிகள்தான் தற்போது வீடியோவாக சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்து பலரும் சிறு வயதிலேயே மனித நேயம் உள்ள சிறுவனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.