மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்துமே தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. தவிர, பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பலரும் தாங்கள் போட்டியிடும் தொகுதி மக்களுக்காக தனியாக ஒரு தேர்தல் அறிக்கையை தங்களின் சொந்த வாக்குறுதிகளாகவே அளித்து, “என்னை தேர்வு செய்தால், அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன்” எனக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான், தென் சென்னை மக்களவை தொகுதி வேட்பாளராக பாஜக சார்பாக போட்டியிடும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தனது தொகுதி மக்களுக்காக, ‘அக்கா – 1825’ என்ற பெயரில் தனியாக தேர்தல் அறிக்கை ஒன்றை இன்று காலை வெளியிட்டுள்ளார்.அதில்,
- தென் சென்னையில் குப்பைகளை அகற்றவும், மழை நீர் வடிகாலுக்கும் தனி திட்டம்.
- தென் சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க தேர்தல் வாக்குறுதியில் முக்கியத்துவம்.
- மீனவ பெண்கள், இளைஞர்களுக்கு தனித்தனி திட்டம்.
- தென் சென்னையில் உள்ள மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த திட்டம்.
- பெருங்குடியில் குப்பைகள் அடைக்கப்படுவதால், மழைநீர் வடிகால் பிரச்சினை.
- பிரச்சனைகளை தீர்த்து மீனவர்களின் அடிப்படை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.
- 6 சட்டசபை தொகுதிகளிலும் 6 அலுவலகங்கள் திறக்கப்படும்.
- மீனவர்களுக்கான ஆலோசனைக்குழு அமைப்பது
-போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் தொடர்பு எல்லைக்கு உள்ளே உள்ள பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக இருக்க ஆசைப்படுகிறேன்” என்று கூறி, அவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணையும் கூறினார்.
அப்போது நிருபர்கள் சிலர், “ஒரு நாளின் 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் தடையின்றி பணி செய்வதை 24 x 7, என்றும், வருடம் முழுக்க கிடைக்கும் சேவையை 365 எனவும் குறிப்பிடுவதை பார்த்திருக்கிறோம். அது என்ன 1825?” என கேட்டனர். அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், “அது ஒன்னுமில்லீங்க, வருசத்தின் 365 நாளும், நான் பணியாற்றவிருக்கும் 5 ஆண்டுகளையும் சேர்த்துத்தான் 1825 என்று கூறி இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் பெருக்கிப் பாருங்கள் இந்த அக்காவின் கணக்கு தப்பாது” என விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: “நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்!” – தமிழிசையை மகிழ வைத்த இயந்திரன்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
- ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படும்
- 3 கோடி பெண் லட்சாதிபதிகள் உருவாக்கப்படும்.
- அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் நீட்டிக்கப்படும்.
- 2025ஆம் ஆண்டு பழங்குடியின ஆண்டாக கொண்டாடப்படும்.
- 70 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் பயன்பெறலாம்.
- மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.
- 2036ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- முத்ரா யோஜனா கடன் உச்சவரம்பு 20 லட்சமாக உயர்த்தப்படும்.
- மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
- வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் விடப்படும்.
உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வெளியிட பட்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.