தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.இந்த கூட்டதொடரில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து கூட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் தலைவர் அப்பாவு இரங்கல் தீர்மானங்களை வாசித்தார். மறைந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஹமீது இப்ராகிம், கே.கே.வீரப்பன், ஏ.எம்.ராஜா, எஸ்.பி.பச்சையப்பன், எஸ்.புருஷோத்தமன், பி.எஸ். திருவேங்கடம், தி.ஜனார்த்தனன், பி.தர்மலிங்கம், எம்.ஏ.ஹக்கீம், கோவை தங்கம் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ்:
எடப்பாடி பழனிசாமி தரப்பில் எம்எல்ஏக்கள் யாரும் வராததால் சட்டப்பேரவை தொகுதி பங்கீட்டில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் இதனால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம்(panner-selvam )அமர்ந்தார். முதல் நாள் சட்டசபை நடவடிக்கைகளில் அவரது கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் சரியாக 9.50 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்குள் ஓ பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகியோர் கூட்டாக வந்தனர். பேரவை வளாகத்திற்குள் சென்று கையெழுத்திட்ட பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார். இரங்கல் தீர்மானத்தில் கலந்து கொண்ட பின் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக சார்பில் ஜனநாயக கடமையாற்றவே பேரவைக்கு வந்துள்ளோம். இபிஎஸ் குறித்த கேள்வியை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு 16 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை நடத்தினார் ஜெயலலிதா.இரு தலைவர்களின் தியாகம், தொண்டர்கள் ரத்தம் சிந்தி உழைத்து உருவாக்கியது இந்த அதிமுக.
எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா காப்பாற்றிய அதிமுக சட்ட விதியை மாசுபடாமல் காப்பாற்றும் நிலையில் உள்ளோம்.பேரவை தலைவர் அறிவிப்பின் அடிப்படையில் இன்றைய பேரவை கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன். அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் நிறைவேற்றும் தீர்மானங்களை ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறோம்”, என்றார்.