காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சுமார் 3500 கி.மீ தூரம் “பாரத் ஜோடோ” என்ற யாத்திரையை தொடங்கினார்.
இதற்காக சென்னை வந்த ராகுல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தையும் மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நினைவு வளாகத்தில் அரச மரக்கன்று ஒன்றையும் அவர் நாட்டு வைத்தார்.
பின்னர், சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். அங்கு படகில் நடுக்கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிட்டார்.
மேலும், காமராஜர் நினைவு மண்டபத்துக்குச் சென்று அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காந்தி மண்டபத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார்.
அதைத்தொடர்ந்து, “இந்திய ஒருமைப்பாட்டுப் பயணம்” தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் ராகுல் காந்திக்கு தேசியக் கொடியை வழங்கினர்.
இதனை தொடர்ந்து ,காந்தி நினைவு மண்டபம் முன் துவங்கிய இந்திய ஒற்றுமை அணிவகுப்பு, கடற்கரை சாலையில் 600 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்ட பேரணி மேடையில் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள், ராகுலின் வருகை மூலம் மத்தியில் மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
முதல் நாள் நடைப்பயணத்திற்குப் பிறகு, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூனே கார்கே, வேணுகோபால், திக்விஜய் சிங், கே.எஸ்.அழகிரி, உம்மன் சாண்டி மற்றும் பலர் கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் நடைப்பயணத்தின் நோக்கம் குறித்து உரையாற்றிய ராகுல் காந்தி, மூன்று பெருங்கடல்கள் சந்திக்கும் இடத்தில் இருந்து பயணத்தைத் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மேலும் நமதுநாட்டின் தேசியக் கொடி ஒவ்வொரு இந்தியனின் சின்னம் என்றார்.
மேலும் தேசியக் கொடி ஒவ்வொரு இந்திய மக்களையும் அடையாளப்படுத்துகிறது. ஒவ்வொரு நபரின் மதம், மொழி மற்றும் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கொடி என்பது எந்த மாநிலத்தின் தனிப்பட்ட சொத்து அல்ல என்றும் ராகுல் காந்தி கூறினார்.