கிண்டி ஆளுநர் மாளிகையில் குண்டு வெடிக்கும் என காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் அமைந்துள்ளது . இங்கு தமிழக ஆளுநர் ரவி தனது குடும்பத்தோடு தங்கி அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், ஆளுநர் மாளிகையில் குண்டு வைத்திருப்பதாகவும், அந்த குண்டு எந்த நேரத்திலும் வெடித்து விடும் என மர்ம நபர் ஒருவர் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து ஆளுநர் மாளிகையை காவல்துறையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர் . மேலும் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால்…ராமதாஸ் வைத்த வேண்டுகோள்!
இதனையடுத்து குண்டு வைத்திருப்பதாக கூறப்பட்ட தகவல் வதந்தி என தெரியவந்தது. அதே நேரத்தில் ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல் விடுத்த நபரின் தொலைபேசி எண்ணை வைத்து தீவிரமாக சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த தொலைபேசி எண் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தேவராஜ் என்பவரது என தெரியவந்தது. இதனையடுத்து தேவராஜை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
ஆளுநர் மாளிகையில் குண்டு வெடிக்கும் என காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.