பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யபட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் பாஜக பிரமுகரான ஊராட்சி மன்ற தலைவரொருவர் வெடிகுண்டு வீசி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர் (42). ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சென்னை கொளத்தூரில் திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட இவர், அதன் பின்னர் காரில் பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் மற்றும் பைக்கில் வந்த மர்ம கும்பலொன்று, அவர் காரின் மீது நாட்டு வெடி குண்டை வீசி பயங்கர ஆயுதங்களால் சங்கரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.மக்கள் அதிகம் கூடும் பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த படுகொலையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யபட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில்,
வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும்,பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர் அவர்கள், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது.
பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் பாஜக அமைதியாக இருக்காது என்றும் கண்டிப்பாக போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.