ஓசூரில் தினம்தோறும் காலை நேரத்தில் கடைகடையாக சென்று அன்பை வெளிப்படுத்தி முரட்டுக்காளை ஒன்று உணவு வாங்கி சாப்பிட்டு வருகிறது.
ஓசூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் கால்நடைகள் ஓசூர் நகரின் வீதிகளில் சுற்றித்திரிந்து தாமாகவே உணவு தேடி வருகின்றன. இதில் ஒரு காளை மாடு ஜல்லிக்கட்டு காளை போல உருவ அமைப்பு கொண்டது.
பார்ப்பவர்களை குத்தி கிழிப்பது போன்று கொம்புகளுடன் வளம் வரும் அதனை பார்த்தாலே பயம் தொற்றி கொள்ளும் அளவுக்கு முரட்டுக்காளை இருக்கும், ஆனால் இந்த காளை மாடு உண்மையில் பரம சாதுவானது.
இந்த முரட்டுக்காளை தினமும் காலை நேரத்தில் உணவு தேடி நகரப் பகுதியில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் செல்லும் பழக்கம் உடையது. ஓசூர் நகரில் நெருக்கடி மிகுந்த சாலையாக உள்ள தாலுகா அலுவலக சாலையில் ஆஞ்சநேயர் கோயில் அருகே புறப்படும்
இந்த காளை மாடு, செல்லும் வழியில் பேக்கரிகள், பழக்கடைகள், ஹோட்டல்கள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் இருக்கும் கடைகளுக்கு சென்று அங்கேயே நிற்கும், காளை மாடு கடை முன்பு வந்தவுடன் கடை உரிமையாளர்கள் அதற்கு பழங்கள், பன், உள்ளிட்ட உணவு கொடுப்பார்கள்,
அதனை தின்று விட்டு காளையானது அங்கிருந்து புறப்படும், இவ்வாறு காலையிலிருந்து மதியம் வரை பல்வேறு கடைகளில் தினந்தோறும் உணவு சாப்பிடும் வழக்கத்தை இந்த முரட்டுக்காளை கொண்டுள்ளது.
இதன் செயல் பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும் அதன் அருகில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுவார்கள், மக்களின் அருகே காளை மாடு சென்றால் பொதுமக்கள் அதனை தட்டி கொடுத்து தங்கள் கையில் இருக்கும் உணவுகளை அதற்கு கொடுப்பது இன்றளவும் வாடிக்கையாக உள்ளது. கடைக்காரர்களுக்கு காளை மாட்டிற்கு தினமும் உணவு கொடுத்தால் தங்களது வியாபாரம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளதால் அவர்களும் தினம்தோறும் அந்த முரட்டு காளைக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
தினம்தோறும் யாரையும் தாக்காமல் அன்பை வெளிப்படுத்தி உணவு வாங்கி தின்று வரும் இந்த முரட்டுக்காளை ஓசூர் பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு செல்ல பிள்ளையாக ஓசூர் வீதிகளில் வலம் வருகிறது.