மொபைல் போன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய தொலைத் தொடர்புத் துறை சார்பில், ‘சஞ்சார் சாத்தி’ என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணைய தளத்தை, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காணொலி வாயிலாக, டில்லியில் நேற்று துவங்கி வைத்தார்.
சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள, தமிழகம் மற்றும் புதுச்சேரி தொலை தொடர்பு துறை அலுவலகத்தில், அதன் ஆலோசகர் ஆனந்த் குமார், காணொலி காட்சியில் பங்கேற்றார்.
மொபைல் போன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்தும், மக்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
மொபைல் போன் வாடிக்கையாளர் ஒருவர், அவரது பெயரில் எத்தனை இணைப்புகள் வைத்துள்ளார்; அவை செயலில் உள்ளதா இல்லையா என தெரிந்து கொள்ள முடியும்.
மேலும், தேவை இல்லாத, பயன்பாடில் இல்லாத இணைப்புகளை ஆன்லைன் வாயிலாக துண்டிக்க முடியும்.
மொபைல் போன் தொலைந்து விட்டால், அதை கண்டுபிடிக்கும் வசதியும் இந்தf இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. தொலைந்த மொபைல் எண் சேவையை முடக்கி வைக்கவும் முடியும்.
முடக்கிய போனை, செயல்பாட்டுக்கு கொண்டு வர நினைத்தால், அதை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும்.
இந்த இணையதளம் வாயிலாக இதுவரை, 4.82 லட்சம் மொபைல் போன் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன.
தொலைந்து போன, 2.44 லட்சம் மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
85 ஆயிரத்து 643 கோரிக்கைகள் பதிவாகி உள்ளன. இதில், 3000 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன
இத்தகவல்களை அதிகாரிகள் தெரிவித்தனர்.