ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஶ்ரீகுருநாத சுவாமி கோயில் குருபூஜை விழாவில் சகதி பூசி சேத்தாண்டி வேடத்தில் சிறுவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ குருநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 48வது குரு பூஜை விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரிய நாச்சியம்மன், ஸ்ரீசித் தி விநாயகர், படர்ந்தபுளி ஸ்ரீ கற்பக விநாயகரருக்கு பொங்கல் விழா நடைபெற்றது.
கடந்த 26ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழாவில், தினந்தோறும் ஸ்ரீ குருநாதசுவாமி, ஸ்ரீ பெரிய நாச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்றது.
நிறைவுநாளில், ஏராமான பக்தர்கள் ஸ்ரீ குருநாதசுவாமி கோயிலில் இருந்து பால் குடங்களை சுமந்து பம்மனேந்தல் கிராமத்தில் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் ஆலயத்தை பால்குடம் வந்தடைந்து. அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

பக்தர்கள் ஒருவர் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

சிறுவர்கள் தங்கள் உடலில் சகதி பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடம் அணிந்து வேப்பிலையை கையில் பிடித்து ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.
தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சகதியை உடலில் பூசிக் கொண்டால் தோல் நோய், அம்மை நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படாது என்பது ஐதீகம்.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் தொடங்கி வைத்தார்.

குருபூஜை விழா நிகழ்ச்சிகளில் கமுதி அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் சேகரன், பம்மனேந்தல் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.