திருச்சியில் நள்ளிரவில் தாயின் 3வது கணவரை வெட்டிப் படுகொலை செய்த மகன் மற்றும் நண்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி கருவாட்டுப்பேட்டையைச் சேர்ந்தவர் பரணிகுமார் (28). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை, காந்தி மார்க்கெட் காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த ஐந்து வருடங்களாக ஜோதி என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்த பரணிகுமார், 3 மாதங்களுக்கு முன்பு அவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜோதிக்கு, பரணிகுமார் 3-வது கணவர் ஆவார்.
வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற பரணிகுமார், மார்ச் மாதம் திரும்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருச்சி தியாகி அருணாசலம் சிலை அருகே உள்ள ஆர்.ஆர்.சபாரோடு சந்திப்பில் பரணிகுமார், துரத்தி துரத்தி விரட்டி கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்த தகவலில், சம்பவ இடம் வந்த கோட்டை காவல்நிலைய போலீசார், பரணிகுமார் சடலத்தைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டபோது, ஜோதியின் மகன்தான் கொலை செய்தது தெரியவந்தது.
நேற்று (மே 9 ) நள்ளிரவு குடிபோதையில் இருந்த பரணிகுமார், ஜோதியிடம் தகராறில் ஈடுபட்டதோடு அடித்து உதைத்துள்ளார்.
இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த ஜோதியின் மகன்
மாதேஷ் தனது நண்பரான டோலி என்கிற முகமது தௌபீக்குடன் சேர்ந்து கத்தியால் பரணிக்குமாரை குத்திக் கொன்றது தெரியவந்தது.
மாதேஷ் மற்றும் முகமது தௌபீக் ஆகிய இருவர் மீதும் பல்வேறு, குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே இருசக்கரவாகன திருட்டு தொடர்பாக, வியாழக்கிழமை(மே 9) காந்திநகர் போலீசார் விசாரித்துவிட்டு இரவில்தான் அனுப்பி உள்ளனர். இதன்பின்னர்தான் இந்த கொலை நடந்ததையும் போலீசார் விசாரித்து தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து போலீசார் தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: யானை வழித்தட வரைவு அறிக்கை – எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!