தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் (22.06.2024) நாளை தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.
இந்நிலையில் கட்சி நிர்வாகிகளுக்கு விஜய், தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Breaking | கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோரை நலம் விசாரித்த நடிகர் விஜய் !
முன்னதாக களளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, விஜய் ஆறுதல் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.