அமெரிக்காவில் நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமான இன்சுலின் கொடுத்து 17 பேரை கொலை செய்த செவிலியர் ஒருவருக்கு 760 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசிக்கும் 41 வயது செவிலியர் ஹீதர் பிரஸ்டீக்குத்தான் இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை ஹீதர் பிரஸ்டீ 17 பேரை கொலை செய்ததாக அவரே ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. நான்குக்கு மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் பணி செய்தபோது ஹீதர் பிரஸ்டீ இந்த சம்பவத்தை நிகழ்த்தி இருக்கிறார். நோயாளிகளின் சர்க்கரை அளவை கணக்கிடாமல் அதிக அளவில் 29 பேருக்கு இன்சுலின் கொடுத்ததில், அவர்களில் 17 பேர் இறந்ததாக தெரியவந்துள்ளது. முதியோர்களிடம் எரிந்து விழுவது, அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது போன்ற ஹீதர் பிரஸ்டியின் நடவடிக்கைகள் அவர்மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன. இதையடுத்து அவர் மீதான புகாரில் போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த கொலை சம்பவங்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பிட்ஸ்பர்க்கில் இருந்து வடக்கே உள்ள பட்லர் நகர நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், அவருக்கு 3 ஆயுள்தண்டனையும், 380-760 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.