பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வரும்16ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/vaikasi-visagam-03.jpg?resize=1024%2C576&ssl=1)
அறுபடை வீடு கொண்ட முருகனின் மூன்றாம் படை வீடான பழனிமலை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.
இங்குள்ளபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து வழிபட்டு செல்கின்றனர்.
மாதந்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறுவதுண்டு.
இந்த நிலையில் முருகனுக்கு மிகவும் உகந்த வைகாசி விசாகம் திருவிழா மே மாதம் 16ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது.
10நாட்கள் நடைபெறும் விசகத் திருவிழாவில் முதல் நாளில் பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் மிதுல லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/vaikasi-visagam-01.jpg?resize=1024%2C576&ssl=1)
விசாகத்தின் போது 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்க குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
வைகாசி விசாகத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
அன்று, மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/vaikasi-visagam-02.jpg?resize=1024%2C576&ssl=1)
இதனை அடுத்து, மறு நாள் அதாவது மே 22ஆம் தேதி புதன்கிழமை அன்று வைகாசி விசாக தேரோட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
வைகாசி விசாகத் திருவிழாவினை முன்னிட்டு, 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வீனை இன்னிசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதே போன்று, பழனி மலையைச் சுற்றி பக்தர்கள் குழு கிரிவலம் சித்திரை கடைசி மற்றும் வைகாசி முதல் வாரத்தில் கிரிவலம் வருவதால், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை நிர்வாகம் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சருக்கு சவால் விடுத்த அன்புமணி!