டெல்லியில் நடைபெற்ற பிரதமரின் பதவியேற்பு விழாவில் மர்ம விலங்கு ஒன்று மேடையின் அருகில் உலா வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதனையடுத்து 24 மாநிலங்களைச் சேர்ந்த 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில்மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுகனாத், பூட்டான் பிரதமர் ஷெரிங் டாக்பே,வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா, செசல்ஸ் துணை அதிபர் அகமது ஆஃபீஃப் ஆகிய வெளிநாட்டுத் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் ,ஷாருக்கான் ,கங்கனா ரனாவத் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் ,புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதால் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குடியரசுத் தலைவர் மாளிகை பகுதியில் 5 கம்பெனி துணை ராணுவப் படையினர், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், ட்ரோன்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தரை முதல் வான்பகுதி வரையில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த சூழலில் பாஜக எம்பி துர்கா தாஸ் பதவியேற்றபோது அவரின் பின் பகுதியில் சிறுத்தை போன்ற ஒரு விலங்கு கேமராவில் பதிவானது. பாஜக எம்பி அஜய் டம்டா பதவியேற்கும்போதும் அதே விலங்கு பின்னணியில் வேகமாக நடந்து சென்றது.
அது, சிறுத்தையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் சவானா வகை பூனைகள் நடமாட்டமாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பிரதமரின் பதவியேற்பு விழாவில் மர்ம விலங்கு ஒன்று மேடையின் அருகில் உலா வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.