கர்நாடக மாநிலத்தில் வீடுபுகுந்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கடமை தவறியதாக இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள வீராப்பூர் ஓனியில் பாட்டியுடன் வசித்து வந்த அஞ்சலி அம்பிகேரா (20) என்பவர் புதன்கிழமை அதிகாலை படுகொலை செய்யப்பட்டார்.
அவரது வீடு புகுந்த கிரீஷ் என்னும் இளைஞர் பாட்டி மற்றும் சகோதரியின் கண் எதிரே அஞ்சலி அம்பிகேராவை தரதரவென இழுத்து வந்து கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருக்கிறார்.
அஞ்சலி அம்பிகேராவை ஒருதலையாக காதலித்து வந்த கிரீஷ் தன்னை காதலிக்கும்படி அவரை மிரட்டி வந்துள்ளார்.
இதனால் தனது பாட்டி கங்கம்மாவுடன் சென்று அஞ்சலி அம்பிகேரா, காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதற்குப் பின்னர்தான், கிரீஷ் வீடுபுகுந்த அஞ்சலியை படுகொலை செய்த துயரம் நிகழ்ந்திருக்கிறது. கொலை செய்த கிரீஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
போலீசில் புகார் அளித்தபோதே, உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படி அநியாயமாக இளம்பெண் உயிர் போயிருக்காது என்று உறவினர்களும், குடும்பத்தினரும் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தனது காவல் பணியில் இருந்து கடமை தவறியதாக ஹூப்பளி பெண்டிகேரி காவல்நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் பெண் காவலர் ரேகா ஆகியோரை, காவல் ஆணையர் ரேணுகா சுகுமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தன்னை காதலிக்கவில்லை என்று கூறி உடன்படித்த நேஹா என்ற மாணவியை பயாஸ் என்னும் மாணவர் குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாக அடுத்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
இதனிடையே தனது நண்பனைப் பார்த்துத்தான், கிரீஷும் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு ஹூப்ளியில் உள்ள ஹலாயாவில் சதாம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசி, கிரீஷின் நண்பராவார்.
இருவர் மீது பைக் திருட்டுகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
நண்பன் சசி கொலை செய்ததை ஊக்காம எடுத்துக் கொண்டே கிரீஷும் கொலை செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இளைய சமுதாயம் இப்படி கொலைகளில் ஈடுபடுவதை உடனடியாக தடுக்க வேண்டும்.
பள்ளிகளிலேயே மனநல நிபுணர்களைக் கொண்டு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இது பிரதமர் மோடியின் தேர்தல்.. மக்கள் தெளிவா இருக்காங்க.. – அண்ணாமலை!