தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்கான முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்..
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.12) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக, தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வரையாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகங்களை வழங்கினார்.
“நீலகிரி வரையாடு” உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகளை உருவாக்குதல்; பள்ளி மாணவர்களுக்கு நீலகிரி வரையாடு குறித்த பாடங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களைக் குறிக்கும் வகையில் டிசம்பர், 2022ல் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்தத் திட்டம் ரூ.25 கோடி செலவில், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை, பரவல் மற்றும் சூழலியியல் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துதல், வரையாடுகளின் வரம்பு முழுவதும் தரப்படுத்தப்பட்ட முறைகளை பயன்படுத்தி ஒத்திசைக்கப்பட்ட கணக்கெடுப்புகள் நடத்துதல், நீலகிரி வரையாட்டினை மறு அறிமுகம் செய்தல் மற்றும் கண்காணிப்பு, பாதிக்கப்பட்ட வரையாடுகளுக்கு நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், பணியாளர்களுக்கு கள உபகரணங்கள் மற்றும் பயிற்சி அளித்தல், மேல் பவானியில் உள்ள சோலா புல்வெளியில் முன்னோடியான மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளுதல், சூழல் – சுற்றுலா திட்டங்களை செயல்படுத்துதல், தகவல் தொடர்பு மற்றும் எல்லை போன்றவை குறித்த முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்.
நீலகிரி வரையாடு திட்டப்பணிகளை செயல்படுத்த திட்ட அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு முழு நேர முதல் திட்ட இயக்குனரையும் அரசு நியமித்து ஆணை வெளியிட்டு, பல்வேறு திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நான்கு முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஒரு மூத்த விஞ்ஞானியையும் நியமனம் செய்துள்ளது என்று குறிப்பிடபட்டுள்ளது.