தமிழகத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சௌமியா சாமிநாதன் கூறுகையில், கொரோனோ தொற்றின் முதல் அலையில் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தெரியாத சூழலில் பொது முடக்கம் தேவைப்பட்டது என்றும், ஆனால் தற்போது உலகம் முழுவதும் மருத்துவ கட்டமைப்புகள் வலுப்படுத்தபட்டுள்ள நிலையில், பொது முழு முடக்கம் தேவையில்லை என்றும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினாலே போதுமானது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்டா வரைஸ் உடன் ஒப்பிடுகையில் ஓமைக்ரான் நோய் பரவல் வேகம் நான்கு மடங்கு அதிகரித்தாலும், பாதிக்கப்படும் விகிதம் குறைவு என்றும் கூறினார். அதுமட்டுமின்றி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் உயிர் இழப்பு பெரிய அளவில் கண்டறியப்படவில்லை என்ற அவர், தடுப்பூசி செலுத்தும் பணிகள் உயிரிழப்பு குறைவிற்கு முக்கிய காரணம் என தெரிவித்தார்.

எனவே வயது முதிர்ந்தவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள் கட்டாயம் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது நல்லது எனவும் தெரிவித்தார்.