திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணி மாறாது என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து கன்னியாகுமரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது..
” மத்திய அரசு, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க மறுப்பதால் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.
காலை உணவு திட்டம், ஸ்மார்ட் கிளாஸ், கொரோனா காலகட்டத்தில் விடுபட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்தது என அனைத்து திட்டங்களும் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவது இந்தியாவுக்கு முன் உதாரணமாக இருக்கிறது.
மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால், தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என்கிறார்.
இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளும் கூட கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது. எக்காரணம் கொண்டும் கல்வியில் அரசியல் இருக்கக் கூடாது.
திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. திமுக தலைமையிலான கூட்டணி எப்போதும் மாறாது. கூட்டணி மாற்றம் என்ற நிலையை திமுக தலைமை ஒருபோதும் எடுக்காது.
நாங்கள் தற்போதும் திமுக கூட்டணியில் தான் உள்ளோம். திமுக மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெறுவோம். மதவாதக் கட்சிகள் தமிழகத்தில் காலுன்றக்கூடாது என்பதால் கூட்டணி கட்சிகள் ஒன்றுபடுகிறோம்” எனக் கூறினார்.