தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்தரன் பேட்டி.
வட கிழக்கு பருவமழை இயல்பிலிருந்து 16% குறைவாக பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,
தமிழக கடற்கரைப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, குமரிக்கடல் பகுதியிலும் இரு வளிமண்டல கீழுடுக்கு சுழற்சி நிலவி வருவதாக கூறினார். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை வட கடலோர மாவட்டங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார்.
கனமழை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடக் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், இன்று மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை என கூறினார்.
வடகிழக்கு பருவமழையானது தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை பதிவான மழையின் அளவு 35 செ.மீ. சராசரி அளவு மழை 30 சென்டிமீட்டர் இயல்பான அளவைவிட 16 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளதாக தெரிவித்தார்.