நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனை பயிற்சி செவிலியர் மாணவி (Nursing student) விடுதி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் செயல்பட்டு வரும் மூகாம்பிகை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பயிற்சி பெண் மருத்துவர் சுகிர்தா பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 5ம் தேதி அங்குள்ள மருத்துவர்களின் பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இன்று நாகர்கோவில் தனியார் மருத்துவமனையின் செவிலியர் மற்றும் பயிற்சி செவிலியர் தங்கும் விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் மேலச்செவல் அருகில் உள்ள சொக்கலிங்கபுரம் பாரதி தெருவை சேர்ந்த சேர்மன்துரை என்பவரின் 19 வயது மகள் கீதா நாகர்கோவில் அருகே உள்ள திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனையில் முதலாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து முடித்து,
தற்போது 2ஆம் ஆண்டு பணி பயிற்சி பெற்று வரும் நிலையில், மருத்துவமனை விடுதியில் உள்ள கழிவறையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதையடுத்து அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் காவல் துறையினர் வருவதற்கு முன்பே அவசரம் அவசரமாக தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை அப்புறப் படுத்தியுள்ளனர்.
இதனால், சந்தேகமடைந்த மாணவியின் சகோதரர் இது தொடர்பாக வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18 வது முறையாக நீட்டிப்பு!
அதனைத் தொடர்ந்து வடசேரி போலீசார் மாணவியின் (Nursing student) உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது மாணவியின் தற்கொலை தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.