ஒடிசாவில் நேற்று நடந்த ரயில் விபத்தில் 288 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்ல முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், ஒடிசா இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகழும் ரத்து செய்யப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வறு நிகழ்வுக்களுக்கு ஏற்பாடு செயப்பட்டிருந்த நிலையில், அனைத்து நிகழ்வுகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.