ஒடிசாவில் நேற்று இரவு அடர்ந்த காட்டின் நடுவே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் நேற்று இரவு தடம் புரண்ட சரக்கு ரயில் மீது துரந்தோ மற்றும் கோரமண்டல் விரைவு ரயில்கள் மோதிய விபத்தில் உயிர் சேதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது .பாலசோரில் உள்ள பஹானாகா ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த கோர விபத்து நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .
கோர விபத்தில் சிக்கி உயிரழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்க உள்ளூர் மக்களுடன் சேர்ந்து இந்திய மீட்பு படையினர் , காவல்துறையினர் என பலரும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா இதுவரை சந்தித்திடாத பயங்கர ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு பாலசோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். சுமார் 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது .
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசர கட்டுப்பாட்டு அறை எண்கள் மற்றும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த விபத்து செய்தியறிந்த மத்திய மாநில அமைச்சர்கள் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , காயமடைந்தோர் எண்ணிக்கைஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .
கோரமண்டல் ரயிலின் எஞ்சின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . கோரமண்டல் ரயிலின் A1, A2,H1, B2,B3,B4,B5,B6,B7,B8,B9 ஆகிய பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது .
மூன்று ரயில்கள் மோதிய இந்த கோர விபத்தில் சிக்கி மருத்துவமனைகளில் உயிருக்கு போராடி வரும் மக்களுக்கு ரத்தம் கொடுக்க ஒடிசாவின் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து ரத்தம் கொடுத்து வந்த நிலையில் தற்போது நாடு மக்கள் அனைவரும் சிறப்பு ரயில்கள் மூலம் ரத்தம் கொடுக்க ஒடிசாவுக்கு விரைந்துள்ளனர் .
இதுமட்டுமல்லாமல் ஒடிசா ரயில்கள் விபத்து காரணமாக பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார் .
கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்வதோடு ஒடிசா ரயில்கள் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் .