கடந்த ஜூன் 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.55 மணியளவில் ஒடிஷா மாநிலம் பாலாசோர் அருகே பஹானகா பஜார் ரயில் நிலையத்திற்கு அருகே கொல்கத்தாவின் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்,
பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மற்றும் சரக்கு ரயில் மோதி நேரிட்ட விபத்தில் 288 பேர் பலியானதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இறந்தவர்களின் உடல்கள் பாலசோரில் உள்ள பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், மீட்பு படையினர் ஆய்வுக்காக உடல்களை எடுக்கச் சென்றனர். அப்போது, உடல்கள் வைக்கப்பட்ட அறையில், வேறு யாரும் இல்லை.
இந்த நிலையில், உடலை எடுக்க வந்த மீட்பு படையில் இருந்த ஒருவரின் காலை திடீரென யாரோ பிடித்த நிலையில், சடலங்கள் வைக்கப்பட்ட அறையில், விபத்தில் உயிர்பிழைத்த நபர் ஒருவர் இருப்பது தெரியவந்தது.
மேலும், விபத்தில் உயிர்பிழைத்த அந்த நபர் 35 வயதான ராபின் என்றும் விசாரணையில் தெரியவந்தது. அதன் பிறகு அவரை அங்கிருந்து உடனடியாக வெளியே கொண்டு வந்ததும், மெல்ல கண் விழித்து எழுந்த ராபின், நான் உயிருடன் இருக்கிறேன், சாகவில்லை. தயவு செய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
ரெயில் விபத்தில் உயிர்பிழைத்த அந்த நபர் மேற்கு வங்க மாநிலத்தின் சர்னேகாளி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
விபத்தில் கால்களை இழந்த நிலையில், உயிர்பிழைத்துள்ள அவரை மீட்பு படையினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஒருவர் திடீரென உயிருடன் எழுந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.