தென் ஆப்பிரிக்காவில் உருவாகியுள்ள கொரோனா வேரியண்ட் ஒமைக்ரான், உலக அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய வகை திரிபானது வேகமாக பரவும் எனவும், அதற்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் குறைவான செயல் திறனைத் தான் கொண்டிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது டெல்டா திரிபை விட பன்மடங்கு அதிகம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒமைக்ரான் திரிபு தற்போது 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஒமைக்ரானை கவலைக்குறியதாக அறிவித்துள்ள உலக சுகாதார மையம், ஒமைக்ரான் திரிபால் வயதானவர்கள் பாதிக்கப்படும் போது அறிகுறிகள் கடுமையானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. முதலில் இந்த திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 42 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேபோல், அமெரிக்காவின் 11 மாகணங்களில் ஒமைக்ரான் பரவல் உள்ளது.
இந்த நிலையில், தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு ஒமைக்ரான் கொரானா திரிபு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் 15 முதல் 19 வயது வரை உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவுக் கூறப்படுகிறது.
மேலும், கொரோனாவின் முதல் மூன்று அலைகளின் போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை என்றும் தற்போது அதிக அளவிலான குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.