1 முதல் 5-ம் வகுப்பு வரை கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான ஆண்டு பொது தேர்வுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
அதையடுத்து, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில், கோடை வெயில் கடுமையாக இருந்த காரணத்தினால் பள்ளி மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு, மீண்டும் ஜூன் 12-ந் தேதியன்று 6 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும், ஜூன் 14-ந் தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும், பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அந்த அறிவிப்பின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (14.06.23) புதன்கிழமை 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர் மாணவிகளை பெற்றோர் அழைத்து வந்து அவர்கள் பயிலும் பள்ளிகளில் விட்டுச் சென்றனர். ஒரு சில பள்ளிகளில் பள்ளிக்கு வரும் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக மிக்கிமவுஸ், ஜோக்கர் என குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று வேடம் அணிந்தும், இனிப்புகள் வழங்கியும் குழந்தைகளை வரவேற்றனர்.