மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக விளங்கும் சைதாபேட்டை இரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் பெண் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீரசல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
கடற்கரை – தாம்பரம் புறநகர் இரயிலில் பயணித்து வந்த பழ வியாபாரம் செய்யும் பெண்மணி இராஜேஸ்வரி என்பவர் சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் இறங்கியபோது மர்ம நபரால் சரமாரியாக வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்த இராஜேஸ்வரி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகரத்தின் மையப் பகுதியாகவும், எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும் விளங்கும் சைதாபேட்டை இரயில் நிலையத்தில் இந்தப் படுகொலை நடைபெற்றுள்ளதும், இந்த வெறிச் செயலைச் செய்தவர் அதே இரயிலில் ஏறி தப்பித்துள்ளதையும் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் சுதந்திரமாக மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதும், சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதும் தெளிவாகிறது. தலைநகரம் கொலை நகரமாக மாறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
உயிரிழந்த பழ வியாபாரியின் குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும், கொலையாளியை விரைந்து கண்டுபிடித்து, சட்டத்தின் முன்நிறுத்தி, தண்டனைப் பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பன்னீரசல்வம் தெரிவித்துள்ளார் .