அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
ஒரு நாடு உயர் கல்வி மற்றும் தொழில் கல்வியில் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே, புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் போன்றவை வளர்ச்சி பெறும். உயர் நிலைக் கல்வியால்தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும். அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது உயர் கல்வியே.
இந்த வகையில், உலக அரங்கில் தமிழ்நாடு வீறு பெற்று, தனிச் சிறப்புடன் விளங்க வேண்டுமெனில், உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி வளர்ச்சி பெறுதல் மிகவும் அவசியம். இந்த இரண்டும் வளர்ச்சி பெற வேண்டுமெனில் கல்லூரிகளில் தரமான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நிரந்தரமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை முறையாக நிரப்ப எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பெரும்பாலான கல்லூரிகளில் பொறுப்பு முதல்வர் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக மாதம் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்து இருப்பதைப் பார்க்கும்போது, நிரந்தரமாக கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்க இந்த அரசு முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
தி.மு.க. அரசின் இந்தச் செயல் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாகக் கூறும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அரசு காலிப் பணியிடங்களை முறையாக, நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்காதது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது.
மாதம் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் அரசுக் கல்லூரிகளில் தற்காலிகமாக நியமிக்கப்படும்போது, நிரந்தர ஆசிரியர்களின் ஊதியத்தை அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்கையில், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு, பயிற்றுவிக்கும் ஆர்வமும் குறையும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவியரின் படிப்பும் பாதிக்கக்கூடும்.
பொதுவாகவே, பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது என்பது உயர் கல்வியைப் பாதிக்கும் செயலாகும். மேலும், முனைவர் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றவர்களை எல்லாம் வெறும் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிப்பது என்பது ஆசிரியர் தொழிலையே அவமதிப்பதற்கும் சமம்.
ஒருவேளை, தற்போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும், ஒருசில ஆண்டுகள் கழித்து அவர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளையாவது அரசு வகுக்க வேண்டும்.
அப்பொழுதுதான், கவுரவ விரிவுரையாளர்களும் ஆர்வமாக பணியாற்றுவார்கள். இல்லையெனில், அவர்களுடைய ஆர்வம் குறைவதோடு, தனியார் கல்லூரிகளில் அதிக சம்பளத்தில் நிரந்தரப் பணி கிடைக்குமேயானால், அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
இதன் காரணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும். எனவே, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தரமான உயர் கல்வியைப் பெற்று அதன்மூலம் வேலைவாய்ப்பினை அடையும் வகையில், அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணியமர்த்தும் முறையினை அரசு கைவிட வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் .