பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது புதிய தலைவராக வழக்கறிஞர் பி.ஆனந்தன் (P. Anandan) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 5 ஆம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக தான் இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அக்கட்சியின் புதிய மாநில தலைவராக பி.ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2009- மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் ஆனந்தன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதையும் படிங்க : எழும்பூருக்கு வாங்க.. ஆம்ஸ்ட்ராங் இறந்து 15 நாளாச்சு! பா. ரஞ்சித் அழைப்பு!
2006-ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து செயல்பட்டு வந்த ஆனந்தன் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் மீது போடப்பட்ட வழக்குகளில் ஆஜராகி எல்லா வழக்கில் இருந்து அவரை விடுவித்தவர் ஆனந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தனையும், மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
“பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் திரு.பி. ஆனந்தன் (P. Anandan) அவர்களையும், மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
மறைந்த சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தன்னலமற்ற கள செயற்பாட்டைப் போல தலித் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் எவ்விதமான சமரசமும் பின்வாங்கலும் இல்லாமல் சித்தாந்தத் தெளிவுடன் பாபாசாகேப் அம்பேத்கர் கண்ட கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவும், தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு களம் காணவும் மனதார வாழ்த்துகிறேன். ” என கூறியுள்ளார்.