மாணவர்கள் இடையே சாதி உணர்வும் சாதிப் பகையும் வளர்ந்து வருவது வேதனையும் அவமானமும் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் (P. Chidambaram) கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது தங்கையை , சக வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பா. சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது:
மாணவர்கள் இடையே சாதி உணர்வும் சாதிப் பகையும் வளர்ந்து வருவது வேதனையும் அவமானமும் அளிக்கிறது.தந்தை பெரியாரும், காமராஜரும் அண்ணாவும் வாழ்ந்த தமிழ்நாட்டில் இந்த நிலையா?
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எந்தப் பண்புகளைக் கற்பிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.சாதி உணர்வையும் சாதிப் பகையையும் நெஞ்சில் கொண்டுள்ள எந்த மாணவரும் “கற்றவர்” என்ற தகுதியை அடைய முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
சக மாணவரை “பிற” சாதி என்று பகை காட்டும் மாணவர்கள் இருக்கும் போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பெருமைப்படுவது கேலிக்கூத்து என தெரிவித்துள்ளார்