தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது தங்கையை , சக வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் , திரை பிரபலங்கள் என பலரும் அவர்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குநரான வலம் வரும் பா.ரஞ்சித் அவரது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பா.ரஞ்சித் கூறிருப்பதாவது :
சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு!
சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே “நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம் என தனது ட்விட்டர் பதிவில் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார் .