புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கு மிகவும் அரிதான பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதை கண்ட மருத்துவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
அந்த குழந்தைக்கு இரண்டு சிறுநீர் குழாய்கள் இருக்கிறது ஆனால் ஆசனவாய் இல்லை. இந்த அரிதான பாதிப்படைந்த குழந்தைக்கு ஏன் இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டது? இது எவ்வகையான நோய் என்பது குறித்த ஆய்வுகளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபகாலமாக மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது உடலில் பல மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. முன்பு அரிதாக இருந்த நோய்களும் கூட இப்போது பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளது.
இதனிடையே அப்படியொரு நிகழ்வு தான் பாகிஸ்தானில் நடந்துள்ளது. அங்கே புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையின் நிலையைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. இதில் ஷாக் என்னவென்றால் அந்த குழந்தைக்கு இரண்டு ஆணுறுப்பு இருந்துள்ளது. அதேநேரம் அந்த குழந்தைக்குஆசனவாய் இல்லையாம், இந்த குழந்தை குறித்த தகவல்கள் இண்டெர்நேஷனல் ஜார்னல் ஆஃப் சர்ஜரி கேஸ் ரிப்போர்ட்ஸ் (International Journal of Surgery Case Reports) வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ ரீதியாக அரிய வழக்குகளில் ஒன்றான இது 60 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுமாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது சிக்கலான சிறுநீரகம், இரைப்பை குடல் அல்லது அனோரெக்டல் குறைபாடுகளுடன் தொடர்புடையது என்றும் கூறியுள்ளனர்.
அந்த குழந்தைக்கு இரண்டு ஆணுறுப்பு இருந்த நிலையில், அதில் ஒன்று மற்றொன்றை விடச் சற்று பெரியதாக இருந்தது என்றும் குழந்தை ஏன் இப்படி இருந்தது என மருத்துவர்களுக்கே முதலில் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது குறித்த அந்த செய்தியில், “குழந்தைக்கு இரண்டு தனித்தனி சிறுநீர்க்குழாய்கள் இருக்கிறது. இரண்டு ஆணுறுப்புகளும் இயல்பான இடத்தில் சிறுநீர் குழாய் திறப்புகளுடன் இயல்பான வடிவில் உள்ளன. குழந்தைக்கு இரண்டு ஆணுறுப்பும் வேலை செய்கிறது. இரண்டிலும் சிறுநீர் வெளியேறுகிறது.
குழந்தைக்கு ஆசனவாய் இல்லாத நிலையில், தேவையான ஆப்ரேஷனும் செய்யப்பட்டது. டாக்டர்கள் கொலோனோஸ்கோபி மூலம் ஒரு ஓட்டையை உருவாக்கினர்.. இதன் மூலமே குழந்தையால் இப்போது மலம் கழிக்க முடிகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து டாக்டர் ஷ்ரே ஸ்ரீவஸ்தவ் கூறுகையில், “இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. எதனால் இப்படிஏற்பட்டது என்று நம்மால் ஒரே வரியில் சொல்ல முடியாது. ஆனால் கர்ப்பத்தின் மூன்றாவது மற்றும் ஆறாவது வாரங்களுக்கு இடையில், கருவில் உள்ள கரு வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களில், cloacal membrane நகலெடுப்பு காரணமாக இது ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்றார்.
என்ன செய்ய வேண்டும்: அதேபோல மருத்துவர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “இரட்டை ஆணுறுப்பு என்பது இரட்டை சிறுநீர் பாதை, சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை மற்றும் செரிமான அமைப்பு என முரண்பாடுகளுடன் இணைந்தே வருகிறது. இது இரட்டை மற்றும் விரிந்த பெருங்குடலுடன் தொடர்புடையது என்பதால், அதை அகற்ற வேண்டும். பெற்றோர்களுக்கு இவை அச்சத்தை ஏற்படுத்தும் என்றாலும் கூட குழந்தையால் சிறுநீர் கழிக்க முடிந்தால் இது ஒன்றும் ஆபத்தானது இல்லை.
இதுபோன்ற கேஸ்களில் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே சிகிச்சை என்று இருக்க முடியாது. குழந்தைகளுக்கான சிகிச்சை முறையும் மாறுபடும். சில காலம் சென்று குழந்தை ஓரளவுக்கு வளர்ந்தவுடன் எந்த சிறுநீர் குழாய் அகற்ற வேண்டும் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்யலாம்.
இரண்டு சிறுநீர் குழாய்கள்: ஏனென்றால் இரண்டு சிறுநீர் குழாய்கள் நீண்ட காலத்திற்கு இருக்க முடியாது. இரண்டில் ஒன்றை அகற்றியாக வேண்டும். போதிய வளர்ச்சி இல்லாத ஆண்குறியை நாம் அகற்றியாக வேண்டும். ஆப்ரேஷனுக்கு பிறகு தொடர்ந்து சில காலம் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றார்.
இது 60 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் அரிய நிகழ்வு என்றாலும் கூட இதற்காக அச்சப்படத் தேவையில்லை என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.