ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் அர்ச்சனை செய்ய தொலைபேசி மூலம் பதிவு செய்யலாம் என வாட்ஸ்அப் வழியே பரவும் பொய்யான தகவல்களை நம்பி பகதர்கள் ஏமாற வேண்டாம் என பழனி திருக்கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சாதாரண நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இக்கோயிலில் விசேஷ நாட்களில் அர்ச்சனைகள் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது . இதனை சாதகமாக பயன்படுத்தும் சில கும்பல்கள் தொலைபேசி மூலம் அர்ச்சனை செய்ய பதிவு செய்யலாம் என சில பொய்யான தகவலை இணையத்தில் பரப்பி பணம் சம்பாதிக்க முயல்கிறது .
இந்நிலையில் இதுகுறித்து கோயில் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
0444 2890021 என்ற எண்ணினை தொடர்பு கொண்டால் பழனி முருகன் கோயில் அர்ச்சகர் உங்களுடைய பெயர். நட்சத்திரம் கேட்பார் அதை சொன்னவுடன் ஆடி கிருத்திகை அன்று பழனி முருகன் கோயிலில் ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்படுவதாக தெரிவித்து பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என பொய்யான தகவல்கள் வாட்ஸ்அப் வழியாக பரப்பப்பட்டு வருவது இத்திருக்கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியவந்தது.
அவ்வாறு பொய்யான தகவல்களை உருவாக்கியவர்கள் மீது காவல் துறை, சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இதுபோன்ற தொலைபேசி எண் மற்றும் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பக்தர்கள்/ பொது மக்கள் இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என கோயில் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .