பனாமாவில் (panama), 60-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக மலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் (panama), கொலம்பியாவை மத்திய அமெரிக்காவுடன் இணைக்கும் ஆபத்தான காட்டுப்பகுதியான டேரியன் கேப் வழியாக பேருந்து ஒன்று 60-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்தது.
அப்போது, கோஸ்டாரிகாவின் எல்லையை ஒட்டிய மேற்கு கடற்கரை மாகாணமான சிரிக்கியை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த கோர விபத்து நடந்துள்ளது.
இதனையடுத்து, இந்த விபத்து குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மேலும், இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 66 பயணிகளில் 39 பேர் சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்னதாகவே உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.