ஒடிசா மாநிலம் பாலசோரில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரயில்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது . இந்த கோர விபத்தில் ஏராளமான பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை வெளிவந்துள்ள தகவலின்படி, இந்த பயங்கர விபத்தில் 250-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் மற்றும் விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதிப்பதாக அரசியல் தலைவர்கள் , திரை பிரபலங்கள் , விளையாட்டு வீரர்கள் ,வெளிநாட்டு அதிபர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .
விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை அகற்றும் பணி நடைபெற்றது . சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
மொத்தம் 4 வழித்தடங்கள் உள்ள நிலையில் இரவு 8 மணிக்குள் 2 ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் என்றும், இந்த பாதைகளில் ரயில்கள் மெதுவாக இயக்கப்படும் என்றும் நேற்று மாலை ரெயில்வே வாரியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கோரமான ரயில் விபத்தில் சேதமடைந்த ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வந்த நிலையில் விபத்து நடந்த பஹானாகா ரயில் நிலையத்தில் இருந்து, நேற்று இரவு 11 மணிக்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது .
சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியதை அடித்து பாலசோர் வழித்தடத்தில் இருந்து, குறைந்த வேகத்தில் பயணிகள் ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.