கடந்த 1912 ஏப்ரல் 15ம் தேதி 2,200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை மீது மோதி இரண்டாக உடைந்து மூழ்கிய டைடானிக் கப்பலை டைட்டன் என்ற சிறிய நீர்மூழ்கிக்கப்பலில் (submerine) சுற்றிப்பார்க்கச் சென்ற 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடலில் மூழ்கிய டைட்டானிக் (titanic) கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட கடந்த 16ம் தேதி கனடா நாட்டின் நியூபோல்ட்லேண்ட் மாகாணத்தில் இருந்து சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமானது.
மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இங்கிலாந்து பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் (58), இங்கிலாந்து தொழிலதிபர் ஷஷாத் தாவூத் (48), அவரது மகன் சுலைமான் தாவூத் (19), பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் அதிகாரி பால் ஹெண்ட்ரி(77), ஓஷன்கேட் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் (60) ஆகிய 5 பேர் பயணித்துள்ளனர்.
கடந்த 18-ம் தேதி இரவு அட்லாண்டிக் கடலில் போலார் பிரின்ஸ் என்ற பெரிய கப்பலில் இருந்து ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய டைட்டன் நீர்மூழ்கி கப்பல் (submerine) 700 கிலோமீட்டர் தொலைவில், கடலின் அடி ஆழத்தில் 1.45 மணி நேரம் செங்குத்தாக சென்ற போது ரேடார் தொடர்பில் இருந்து திடீரென்று துண்டிக்கப்பட்டது.
அதையடுத்து, மாயமான நீர்மூழ்கி கப்பலை கனடா, அமெரிக்க கடற்படையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கடந்த 4 நாள்களாக மாயமான 22 அடி நீள நீர்மூழ்கியை பல நாடுகளின் ஆய்வாளர்களும், அமெரிக்க கப்பல்படை, விமான படையினர், கனடா நாட்டு கப்பல் படையினர் என ஒரு பெருங்குழு சோனார் உள்ளிட்ட கருவிகளின் உதவியுடன் தேடி வந்தனர்.
ஆழ்கடலில் பயணத்தை தொடங்கிய டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் 96 மணி நேரத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் உள்ள நிலையில், புதன்கிழமை (21.06.23) அன்று 66 மணி நேரம் ஆகிவிட்டது எனவும், கப்பலில் இன்னும் 30 மணி நேரம் ஆக்சிஜன் விநியோகம் எஞ்சியுள்ளது எனவும் கூறப்பட்ட நிலையில், நேற்றுடன் ஆக்சிஜன் விநியோகமும் முடிந்து விட்டது.
இந்நிலையில், கனடா நாட்டின் கப்பல் படையினர் நேற்று நடத்திய தேடுதல் பணியின் போது மாயமான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிறிய பாகங்கள் கடலுக்கடியில் சுமார் 1600 அடி ஆழத்தில் உடைந்த நிலையில், கண்டறியப்பட்டுள்ளதாகவும், நீர்மூழ்கி கப்பல் வெடித்துச்சிதறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த சிறிய டைட்டன் நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஓஷன் கேட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.