பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 116ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் முதலமைச்சர் மலர்மாலை வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடி ஆறாண்டு காலம் சிறையில் இருந்தவர் பசும்பொன் திருமகனார் அவர்கள். அவருடைய நினைவைப் போற்றுகின்ற வகையில் இன்று அவருக்கு நாங்கள் எல்லாம் வணக்கத்தை செலுத்தி இருக்கிறோம், அஞ்சலியை செலுத்தி இருக்கிறோம்.
“தேவர் திருமகன்” என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் அவரைஅன்போடு அழைக்கத் தொடங்கினார்கள்.
1963-ஆம் ஆண்டு தேவர் அவர்கள் மறைவெய்திய நேரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் நேரடியாக இங்கு வருகை தந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
1969-ஆம் ஆண்டு பசும்பொன்னுக்கு வந்து அவருடைய நினைவிடத்தை பார்வையிட்டு அதற்கு தேவையான அரசு உதவிகளைச் செய்தவர் தான் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்.
2007-ஆம் ஆண்டு பசும்பொன் தேவர் திருமகன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக நடத்தி பெருமை சேர்த்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களஅப்போது,
தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கை அமைத்து தந்ததும் தேவர் இல்லத்தை 10 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்ததும் – 9 இலட்சம் ரூபாய் மதிப்பில் நூற்றாண்டு விழா வளைவு அமைத்ததும், 9 லட்சம் ரூபாய் செலவில் புகைப்படக் கண்காட்சி அமைத்துக் கொடுத்ததும், 4 இலட்சம் ரூபாயில் நூலகம், 5 இலட்சம் ரூபாயில் முடி இறக்கும் இடம், 5 இலட்சம் ரூபாயில் பால்குட மண்டபம், 5 இலட்சம் ரூபாயில் முளைப்பாரி மண்டபம் இப்படி எல்லாவற்றையும் அமைத்து கொடுத்தவர் தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்.
தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பசும்பொன் கிராமத்துக்கு மட்டும், மொத்தமாக 2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்தவர் தான் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்!
அதுமட்டுமில்லாமல், மதுரையில் இன்றைக்கு கம்பீரமாக தேவர் சிலை அமைந்திருக்கிறது என்றால், மதிப்பிற்குரிய பி.கே.மூக்கையாத்தேவர் முயற்சியால் அமைக்கப்பட்ட அந்த சிலைத் திறப்பு விழாவை, தலைவர் கலைஞர் அவர்கள் அரசு விழாவாக நடத்தி, அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி அவர்களை அழைத்து வந்து, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலேயே அந்த நிகழ்ச்சியை நடத்தினார்.
அதேபோல், மதுரை ஆண்டாள்புரம் பாலத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பாலம் என்று பெயர் சூட்டியவர் தலைவர் கலைஞர் அவர்கள்என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.