கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் திமுக வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 110 விதி கீழ் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அதிகாரபூர்வ அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.
நகைக் கடன் தள்ளுபடிக்கு உரிய, தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, அனைத்து நகைக்கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், உள்ளிட்ட 51 விதமான தகவல்களைச் சேகரித்து, அதன் விவரங்கள் தொகுக்கப்பட்டு கணினி மூலம் ஒரு மாதம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களுக்கான இறுதி பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், பயனாளிகள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும் எனவும் கூறினார்.
நகைகளுக்கு செலுத்த வேண்டிய வட்டியை அரசே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.