கொரோனா பரவல் காரணமாக, நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழா நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கான அனுமதிக்கு முழுமையாக தடை விதிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.
நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழா ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கொடியேற்றம் ஜன. 4-ஆம் தேதி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சிகளான சந்தனக் கூடு ஊர்வலம் ஜன. 13-ஆம் தேதியும், சந்தனம் பூசும் விழா ஜன. 14-ஆம் தேதியும், கொடி இறக்கம் ஜன. 17-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கந்தூரி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பக்தர்களில், இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றும், தர்காவின் அனுமதிச் சான்றும் பெற்றவர்கள் மட்டுமே தர்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக பல மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரங்கு மற்றும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களுக்கு தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் வித்திக்கபட்டுள்ளது.
இந்த நிலையில், நாகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், கரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு முற்றிலுமாகத் தடைவிதிக்கப்படுகிறது என்றும் தர்காவின் பாரம்பரிய முறைப்படியான கந்தூரி விழா வழிபாடுகள் அனைத்தும் பக்தர்களின்றி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.