திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாகவே பெரியார் சிலை மீதான தாக்குதல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. .செருப்பு மாலை அணிவிப்பது, காவி சாயம் பூசுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைவர்களின் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக பொன்னேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ள செல்லக்கிளி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் சிலையை இரும்பு கம்பியால் சேதப்படுத்தியதாகவும் அவர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக நிகழ்விடத்திற்கு காவல் துறையினர் வந்து பார்த்த போது சிலையின் முகம் சிதைக்கப்பட்டும், மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டும் இருந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக சிலையை துணியால் மறைத்தனர்.
இந்நிலையில் திராவிட கழகத்தினர் சிலையை சேதப்படுத்திய இடத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் பரபரப்பு நிலவியது.
செல்லக்கிளி என்பவரிடம் சிலையை சேதப்படுத்தியதற்கான காரணம் குறித்தும விசாரணை நடத்தி வரும் போலீசார், இதனிடையே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்திற்கு எதிரே உள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மைக்காலமாக மீஞ்சூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது தமிழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.