2022 – 2023-ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஒரு மாத விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் 1ம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.
ஆனால், கடுமையான வெப்பம் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 7-ம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பிறகும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல் அதிகரித்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் சமூக வலைதளங்களின் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனால், பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் நலன் கருதி 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்து கோடை விடுமுறையை நீட்டித்தது.
அதன்படி, கோடை விடுமுறை முடிந்து நாளை 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் செயல்பட உள்ள நிலையில், 2022 – 2023 கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் பாட வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
வெயிலின் தாக்கத்தினால் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படுவதால், ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் நேரப் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளதை அடுத்து மாணவர்களுக்கு பாடச் சுமை ஏற்படாதவாறும், ஆசிரியர்களின் பயிற்சியிலும் பாதிப்பு ஏற்படாதவாறும் இனி சனிக்கிழமைகளிளும் பாட வகுப்புகளை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.