திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
தெலங்கானா மாநில தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பல்வேறு கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறனர். இதில், பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக் கொண்டு, ஹைதராபாத்தில் இருந்து நேற்றிரவு தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர், முதல்வர் ஜெகன்மோகன், துணை முதல்வர், அமைச்சர் பெ. ராமசந்திராரெட்டி, முதன்மை செயலாளர், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், மற்றும் எம்பிக்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக திருமலை சென்றடைந்த பிரதமர் மோடியை அங்கு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி, உட்பட பலர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர்.
இரவு திருமலையில் தங்கிய பிரதமர் மோடி இன்று காலை 8 மணிக்கு திருமலை திருப்பதி கோயியில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு வேத மந்திரங்கள் முழங்கி பண்டிதர்கள் வாழ்த்து தெரிவித்தனர். சாமி தரிசனத்தை முடித்துக் கொண்ட அவர், டெல்லி புறப்பட்டார்.
அது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “140 கோடி இந்தியர்களின் நல் ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.